My BOOKS

அன்று வந்ததும் இதே நிலா
வெகுகாலத்துக்குப் பிறகு எளிய தமிழில் இயல்பான நடையில் ஒரு அறிவியல் புதினம். மடிக்கணினியின் மடியில் தவமிருக்கும் இருபத்தியோரம் நூற்றாண்டையும், மாமல்லன் காலத்து எட்டாம் நூற்றாண்டையும், மதராசப்பட்டணத்து பத்தான்பதாம் நூற்றாண்டையும் நேர் கோட்டில் இழுத்துச்செல்லும் விந்தைக்கதை. யதார்த்தமான ஒரு மாலைப்போதில் காற்றுவாங்கச்செல்லும் பாரதிக்கு திடீரென்று அதே காற்று மாற்றிச் சுழன்று சூறாவளியாய் அவளையும் இன்னும் சிலரையும் சேர்த்துச் சுழற்றுகிறது. ஒரு இரவுக்குள் என்னென்ன நடந்து விட முடியும்? அசாத்தியங்கள் எல்லாம் அவை சாத்தியங்களாகிறவரை மட்டுமே. ஆழமான நம்பிக்கைகள் பொய்த்துபோகிற போது யாரை நம்புவது எப்படி நம்புவது? கொஞ்சம் விறுவிறுப்பு -கொஞ்சம் கலகலப்பு, கொஞ்சம் சரித்திரம்- கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் சஸ்பென்ஸ் -கொஞ்சம் ரொமான்ஸ் என்று கலந்த தொய்வில்லாத ஓட்டத்தில் இந்த நாவல் படிக்கச்சுவைக்கும் ஒரு இலகுவான வாசிப்பாக இருக்கும் என்பது உண்மை.

கடாரம்
பதினோறாம் நூற்றாண்டு.
*இஸ்லாமிய சன்மார்க்கம் எழுச்சி கண்ட காலம்.
*கீழைத்தேசங்களில் வணிகம் செழிப்புற்றிருந்த காலம்.
*சீனத்தில் சொங் சாம்ராஜ்யம் எழுச்சியுற்றிருந்த காலம்.
*பரதகண்டத்தில் உத்தரபதத்திலே கஜினி கால் வைத்த காலம்.
தக்கணத்துச் சோழசாம்ராஜ்யம் வடக்கே கங்கை வரையும், மேற்கே சேர பாண்டிய தேசங்களும், தெற்கே ஈழமும், பண்ணாயிரந்தீவு, சாந்திமத்தீவும் இன்னும் பலவும் கொண்டு பரதவர்ஷத்தில் குறிப்பிடத்தக்க நிலப்பகுதியை தன் ஆதிக்கத்தில் சேர்க்கத் துணிந்த காலம். சோழர்களின் பொற்காலம்.
இராஜேந்திரச்சோழன். இவனது காலம் தமிழகத்தின் பொற்காலம்.
இந்த இராஜேந்திரச் சோழன் பொ.உ.1025 ல் கடாரம் நோக்கிப் படையெடுத்ததாக அவனது விரிவான மெய்கீர்த்தியும், திருவாலங்காட்டுப் பட்டயமும் கூறுகின்றன. ஆனால் படையெடுப்புக்கான காரணத்தை அவை கூறவில்லை.
கீழ்த்திக்குத் தேசங்களிலேப் பெரும்சக்தி படைத்த நிலப்படையும் நீர்ப்படையும் கொண்டதென பெயர்பெற்ற- ஸ்ரீவிஜய சாம்ராஜ்யமே- கடல்கடந்து வந்த சோழப்படைக்கு அடிபணிந்தது சாத்தியம் தானா? எனில் அது எப்படி?
இவையெல்லாம் சரித்திரம் பதில் சொல்லாமல் விட்டுச்சென்ற சில புதிர்கள்.
புதிருக்கான விடையைக் கற்பனை கலந்து தேட முயல்வதே இக்கதை
